ADDED : ஜன 20, 2025 06:49 AM
யாத்கிர்: ''சரியான நேரத்துக்காக காத்திருக்கிறேன். அந்த நேரம் வந்ததும், பா.ஜ.,வுக்கு திரும்புவேன்,'' என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹிந்துத்வா தலைவர்கள் பற்றாக்குறையால், நான் பா.ஜ.,வை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பா.ஜ.,வை சுத்திகரிக்க வேண்டும். கட்சியின் சூழ்நிலை, இப்போதும் அப்படியே தான் உள்ளது. சுத்தமாகவில்லை. இன்று இல்லை என்றாலும், கட்சியில் அனைத்தும் சரியாகும் என, நம்புகிறேன்.
பா.ஜ.,வுக்கு திரும்பும்படி, பல தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சரியான நேரத்துக்காக காத்திருக்கிறேன். அந்த நேரம் வந்த பின் பா.ஜ.,வுக்கு செல்வேன்.
பா.ஜ., எனக்கு தாயை போன்றது. ஷிவமொக்கா நகர பா.ஜ., செயலர் முதல், துணை முதல்வர் வரை, பல பதவிகளை வழங்கியது. ஆனால் கட்சியில் நடந்த சில, விரும்பத்தகாத நிகழ்வுகளால் கட்சியை விட்டு வெளியேற வேண்டி வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.