எல்லாமே போலி... பேஸ்புக் அட்மின் விவகாரத்தில் அலறுகிறார் கார்கே
எல்லாமே போலி... பேஸ்புக் அட்மின் விவகாரத்தில் அலறுகிறார் கார்கே
UPDATED : அக் 18, 2024 11:14 AM
ADDED : அக் 18, 2024 11:10 AM

புதுடில்லி: பேஸ்புக் அட்மின் விவகாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பா.ஜ.,வின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு, கர்நாடகாவின் மூடா நிலம் ஒதுக்கீடு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவின் பேஸ்புக் கணக்கு வெளிநாட்டில் இருந்து கையாளப்படுவதாக பா.ஜ., புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே பெயரைக் கொண்டுள்ள பேஸ்புக் கணக்கில் நார்வே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா பா.ஜ., 'வக்பு நில அபகரிப்பு செய்த மல்லிகார்ஜுன் கார்கேவின் சமூக ஊடக பக்கங்கள் வெளிநாட்டில் இருந்து கையாளப்படுகிறது. காங்கிரஸின் சாதி ரீதியிலான பிளவுபடுத்தும் அரசியலுக்குப் பின்னால் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பதை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள பா.ஜ., 'உங்க சொந்த மக்கள் மீது இல்லாத நம்பிக்கை, வெளிநாட்டினர் மீது எப்படி வந்தது, இந்தியாவுக்கு துரோகம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ.,கவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, அது போலியான கணக்கு என்று விளக்கம் அளித்துள்ளார்.