ஆக.20ல் தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்!
ஆக.20ல் தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்!
ADDED : ஆக 18, 2025 07:44 PM

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆக.20ல் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப். 9ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய ஆக.21ம் தேதி கடைசி நாள் ஆகும்.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னரும், தமிழருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பாஜ ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குபடி நிச்சய வெற்றி என்ற நிலையில், தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமது வேட்பு மனுவை ஆக.20ல் தாக்கல் செய்கிறார்.
இந்த விவரத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் டில்லி வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியினருடன் ஒரு அறிமுக சந்திப்பை நடத்தினோம். சி.பி. ராதாகிருஷ்ணன் போன்ற ஒருவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சியினரும் அவருக்கு (சி.பி. ராதாகிருஷ்ணன்) ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
முன்னதாக, அவர் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.