ஒரு சினிமா நிஜமானது...! 'த்ரிஷ்யம்' பார்த்து தொழிலபதிரை கொன்ற 'மாஜி' காவலர்
ஒரு சினிமா நிஜமானது...! 'த்ரிஷ்யம்' பார்த்து தொழிலபதிரை கொன்ற 'மாஜி' காவலர்
UPDATED : ஆக 25, 2024 02:37 PM
ADDED : ஆக 25, 2024 02:34 PM

நொய்டா: பிரபலமான 'த்ரிஷ்யம்' படத்தை பல முறை பார்த்து விட்டு, அதே போல பிரபல தொழிலதிபரை கொன்ற மாஜி காவலர், உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
டாப் 10 க்ரைம்
சினிமா விரும்பிகளின் ஆகச்சிறந்த டாப் 10 க்ரைம் திரைப்படங்களில் மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்துக்கு அசைக்க முடியாத இடம் உண்டு. எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கொலை, அதை மறைக்க பின்னப்படும் சாதுர்யமான சம்பவங்கள், போலீசை குழப்பி குடும்பத்தை காப்பாற்றும் தைரியம் என ஒரு எளிய மனிதனின் வாழ்வியல் நிகழ்வுகள் காட்சியமைப்புகளாக நீளும்.
வசூல் சாதனை
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மேனரிசத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் மறுஆக்கமாகி வசூலில் சாதனை படைத்தது. இந்தியில் 'த்ரிஷ்யம்' என்ற பெயரில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தது.
ஆதாயக்கொலை
இந்நிலையில், இந்த படத்தை பலமுறை திரும்பத் திரும்ப, பார்த்து அதே ஸ்டைலில் ஒரு ஆதாயக் கொலை நொய்டாவில் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தை செய்தது மாஜி காவலர் என்பது கூடுதல் அதிர்ச்சி. இது குறித்து விவரம் வருமாறு;
வீட்டு விவகாரம்
கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் அங்குஷ்சர்மா, 42. தொழிலதிபரான இவருக்கும், மாஜி காவலர் பிரவீன் என்பவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதன் நீட்சியாக தமக்கு சொந்தமான வீடு ஒன்றை விற்றுத் தருமாறு கூறி உள்ளார். அந்த வீட்டின் விலை ரூ.1.20 கோடியாக நிர்ணயக்கப்பட்டது.
மோதல், பணம்
வீட்டை விற்றுத் தருவதாக கூறி அதற்காக ரூ.8 லட்சத்தை முன் பணமாக அங்குஷ் சர்மாவுக்கு பிரவீன் கொடுத்துள்ளார். இதற்கான ஒப்பந்தமும் இருவர் தரப்பில் போடப்பட்டது. ஆனால் கொடுக்கல், வாங்கலில் இருவருக்கும் இடையே மோதல் உருவாக, வாங்கிய பணத்தை பிரவீனிடம் அங்குஷ் சர்மா கேட்டுள்ளார்.
த்ரிஷ்யம் ஸ்டைல்
பணத்தை திருப்பிக் கொடுக்க மனமில்லாத பிரவீன், அங்குஷ் சர்மாவை கொல்ல திட்டம் போட்டுள்ளார். போலீசில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் தரமான க்ரைமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியில் வெளியான த்ரிஷ்யம் படத்தையும், அதே போன்ற கதைகளை கொண்ட வெப் சீரிஸ் தொடர்களையும் பல நாட்கள் விடாமல் பார்த்துள்ளார்.
சுத்தியல்
இனி கொலையை சிறப்பாக செய்துவிடலாம் என்று முடிவெடுத்த பிரவீன், அங்குஷ் சர்மாவை அவரது அலுவலகத்துக்கு காரில் நேராக போய் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மது அருந்தி போதையில் இருந்துள்ளனர். இந்த தருணத்தை பயன்படுத்தி அங்குஷ் சர்மாவை தாம் ஏற்கனவே கொண்டு வந்திருந்த சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறார்.
சடலம்
பின்னர், எந்த குடியிருப்பால் சண்டை வந்ததோ, அதே வீட்டில் சடலத்தை மறைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த வீட்டுக்கு யாரும் வருவது இல்லை என்பதால் கொலை, சடலம் குறித்து விவரங்கள் தெரியவில்லை.
கைது
13 நாட்களாக அங்குஷ் சர்மாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், கடைசியில் கொலை செய்த பிரவீனை கைது செய்தனர். கொலைக்கு அவர் பயன்படுத்திய சுத்தியல், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
100 சி.சி.டி.வி.
புகார் தொடர்பாக போலீசார் கையாண்டு அணுகுமுறை மலைக்க வைப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., காட்சிகள், சம்பவம் நடந்த போது பரிமாறப்பட்ட செல்போன் தகவல்கள், சாட்சிகள் என அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பிரவீனை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய போது தான், த்ரிஷ்யம் படம், இன்னும் சில க்ரைம் தொடர்களை பார்த்து, பார்த்து கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

