பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார் ஈரான் தலைவர் கமேனி
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார் ஈரான் தலைவர் கமேனி
UPDATED : அக் 21, 2025 07:41 AM
ADDED : அக் 21, 2025 07:29 AM

டெஹ்ரான்: பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.
ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பிறகு அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தடைபட்டது.
கடந்த வாரம், காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் தொடங்கியது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள காரணமாக இருந்த டிரம்புக்கு, இஸ்ரேல் பார்லிமென்டில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று அதிபர் டிரம்ப் பேசுகையில், 'ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்' என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய பேச்சுவார்த்தை நடத்த விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது: டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப் பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் அவர்கள் ஈரானின் அணுசக்தித் மையங்களை குண்டுவீசி அழித்ததாகக் கூறுகிறார். சரி, கனவு காணுங்கள்.
ஈரானுக்கு அணுசக்தி வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்தத் தலையீடுகள் பொருத்தமற்றவை. இவ்வாறு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார்.