ADDED : மார் 05, 2024 08:51 PM

நாக்பூர்
: நக்சலைட் தொடர்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டில்லி
பல்கலை முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்ற
நாக்பூர் கிளை விடுவித்தது.
டில்லி பல்கலையின் முன்னாள்
பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, 54. இவருக்கு மாவோயிஸ்ட்
அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக எழுந்த
குற்றச்சாட்டின் அடிப்படையில், 2014ல் கைது செய்யப்பட்டார்.இவருடன்,
பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்
உட்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவின்
கட்சிரோலி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் இறுதியில்
சாய்பாபா மற்றும் ஐந்து பேருக்கும், 2017ல் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை,
சாய்பாபா மற்றும் ஐந்து பேரை விடுவித்து 2022ல் உத்தரவிட்டது.
இந்த
உத்தரவை எதிர்த்து அதே நாளில் மஹாராஷ்டிரா அரசு உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை
ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை
மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு 2023ல் உத்தரவிட்டது.
மனுவை
மீண்டும் விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, சாய்பாபா
மற்றும் ஐந்து பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. சாய்பாபா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

