கலால் உரிமக்கட்டணம் செலுத்த அவகாசம் 14ம் தேதி வரை நீட்டிப்பு
கலால் உரிமக்கட்டணம் செலுத்த அவகாசம் 14ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : அக் 02, 2024 10:17 PM
விக்ரம்நகர்,:தொழில்நுட்பக் கோளாறால் இணையதளம் முடங்கியதால், கலால் உரிமக்கட்டணம் செலுத்த அவகாசம் 14ம் தேதி வரை நீட்டித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் நிர்வாகத்தில் கலால் வினியோக மேலாண்மைக்கான பிரத்யேக இணையதளம் உள்ளது. இதன் வாயிலாக கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்புகள் மதுபான கொள்முதலை மேற்கொள்கின்றன.
இந்த இணையதளம் வாயிலாக மது விற்பனைக்கான உரிமம் பெறுவது, புதுப்பிப்பதற்கான கட்டணமும் செலுத்தப்படுகிறது. இந்த இணையதளம் கடந்த மாதம் பெரும்பாலான நாட்கள் முடங்கியது.
இதன் காரணமாக ஹோட்டல்கள், கிளப்புகளில் மதுபான இருப்பு குறைந்தது. தங்கள் உரிமத்தை புதுப்பிக்க முடியாமலும் அதற்கான கட்டணத்தை செலுத்த முடியாமலும் ஹோட்டல், கிளப் உரிமையாளர்கள் தவித்தனர்.
மதுபான கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கலால் உரிமக் கட்டணத்தின் இரண்டாவது தவணையை செலுத்த முடியவில்லை.
இதனால் கலால் துறைக்கு விற்பனை மற்றும் வருவாயில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 750 கோடி ரூபாயாக இருந்த சராசரி மாத வருவாய் 400 கோடியாக குறைந்தது.
ஏறக்குறைய மூன்று வாரங்கள் செயலிழந்த இணையதளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கியது. இதனால் உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

