மிதமான போதை தரும் சரக்கு; ம.பி.,யில் வருது பிரத்யேக 'பார்'
மிதமான போதை தரும் சரக்கு; ம.பி.,யில் வருது பிரத்யேக 'பார்'
ADDED : பிப் 18, 2025 02:48 AM

போபால்: மத்திய பிரதேசத்தில், குறைந்த அளவு ஆல்கஹால் அடங்கிய மதுபானங்களை மட்டும் விற்பனை செய்யும் பிரத்யேக மதுபான கூடங்கள், ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.
ம.பி.,யில், புதிய கலால் கொள்கை சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, 17 புனித தலங்கள் உட்பட 19 நகரங்களில் மதுபான விற்பனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உஜ்ஜயின், ஓம்காரேஷ்வர், மஹேஷ்வர், மண்டலேஷ்வர் உள்ளிட்ட புனிதத்தலங்கள் இதில் அடங்கும். இந்த நகரங்களில் உள்ள 47 மதுபானக் கடைகள் ஏப்ரல் 1 முதல் மூடப்பட உள்ளன.
குஜராத், பீஹார் போல மதுபானங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படாததால், தனி நபர்கள் மது அருந்த தடையேதும் இல்லை.
பார்ட்டி என்ற பெயரில் கூட்டம் கூடி மது விருந்து நடத்த முடியாது.
மேலும் புதிய கலால் கொள்கையின்படி, குறைந்த அளவு ஆல்கஹால் அடங்கிய மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கூடங்கள், ஏப்ரல் 1 முதல் திறக்கப்பட உள்ளன.
இங்கு, பீர், ஒயின் உள்ளிட்ட மது வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆல்கஹால் அளவில் 10 சதவீதம் மிகாமல் உள்ள பானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதர மதுபான வகைகள் இங்கு விற்பனை செய்யப்படாது.