பணம் விழுங்கும் காலாவதி கிப்ட் கார்டு; ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை
பணம் விழுங்கும் காலாவதி கிப்ட் கார்டு; ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை
UPDATED : ஜன 26, 2025 09:23 AM
ADDED : ஜன 26, 2025 09:21 AM

புதுடில்லி: அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில், அமேசான் கிப்ட் கார்டு மீது பயனர்களால் சில புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. அமேசான் வாடிக்கையாளர்களின் காலாவதியான கிப்ட் கார்டுகள் வாயிலாக, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் முடக்கப்படுகிறது. சமீபத்தில் எனது அலுவலகத்திற்கு கூட இத்தகைய நிலை ஏற்பட்டது.
29 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சேவையை பயன்படுத்து வருகின்றனர். குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாத அமேசான் கணக்கு, 'டார்மெண்ட்' என்ற பெயரில் செயலிழந்து விடுவதால் வாடிக்கையாளர்களின் பணம், திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விடுகிறது. இதற்கு தீர்வு எதுவும் இல்லாத நிலை உள்ளது.
அமேசானில் இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான கிப்ட் கார்டு வாங்கப்பட்டுள்ளன. ப்ரீபெய்ட் கட்டணம் குறித்த ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்சம் ஒரு வருடம் செல்லுபடியாக வேண்டும். முன் அறிவிப்புக்குப் பிறகு மட்டுமே கணக்கு முடக்கப்பட வேண்டும்.
மீதமுள்ள தொகையை பயனர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும். நுகர்வோரைப் பாதுகாக்க வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.