ADDED : செப் 03, 2025 11:59 PM

பாலக்காடு; பாலக்காட்டில் அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு வடக்கந்தரை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன், ஆக., 20ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சாலையோரம், பட்டாசு போன்று கிடந்த பொருளை எடுத்து வீசிய போது, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய சோதனையில், அங்கு ஐந்து வெடிபொருள் கிடந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், எஸ்.பி., அஜித்குமார் அறிவுரை படி, பாலக்காடு டவுன் மேற்கு இன்ஸ்பெக்டர் விபின்வேணுகோபால் தலைமையிலான சிறப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் படி, பூளக்காடு பகுதியை சேர்ந்த பாசில், 28, கல்லேக்காடு பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத், 27, சுரேஷ், 29, ஆகியோரிடம் விசாரித்தனர்.
கிணறு சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் சுரேஷின் வீட்டை சோதனையிட்ட போது, 24 டெட்டனேட்டர், 12 ஜெலட்டின் குச்சி உள்ளிட்ட வெடிபொருள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு வெடிபொருட்கள் வழங்கியவர்கள் குறித்து, மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.