திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு
திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு
ADDED : நவ 08, 2025 05:34 PM

சென்னை: திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.
திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் இளைஞர் அணி, திமுக 75 அறிவுத் திருவிழா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (நவ.8) நடந்தது. நிகழ்ச்சியை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், உதயநிதியை வெகுவாக பாராட்டினார். அவர் பேசியதாவது;
ஒரு கட்சி ஆரம்பித்தால் பல கொள்கைகளை சொல்வார்கள். அந்த கொள்கைகளை நிறைவேற்ற கட்சி வேலை செய்யும். ஆனால் சில நேரங்களில் கட்சிகளின் கொள்கைகளில் கூட சமரசம் ஏற்படுவது உண்டு. ஆனால் உயிர்க் கொள்கைகளுக்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
திமுகவை பொறுத்தவரையில், அரசியலில் சமரசங்கள் ஏற்பட்டாலும் உயிர்க் கொள்கையான ஹிந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இவைகள் எல்லாம் நாம் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை. இந்த இயக்கத்தை ஆரம்பித்து 67ல் ஆட்சியை பிடித்து, அதை கருணாநிதி கையில் அண்ணாதுரை ஒப்படைத்துவிட்டு போனார். அவர் மிக வேகமாக, அற்புதமாக இந்த நாட்டை ஆண்டார், இயக்கத்தை கட்டிக் காத்தார்.
அந்த தலைவரும் மறைகிற பொழுது, ஸ்டாலினை கூப்பிட்டு என் பாதையில் நட என்று அறிவுறுத்தி கட்சியை ஒப்படைத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் கருணாநிதியுடன் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவன். ஸ்டாலினை இளம்பிராயத்தில் இருந்து அறிந்தவன்.
நானே இன்றைக்கு வியக்கிற அளவுக்கு, போற்றுகிற அளவுக்கு, சல்யூட் அடிக்கிற அளவுக்கு அவர் தமது பணியை ஆற்றுவதை பார்த்து மெத்த பெருமைப்படுகிறேன். ஏன் என்றால் கருணாநிதியிடம் பணியாற்றியவர். அவரிடம் கற்றவர்.
அதே போன்று, அடுத்து இருக்கிற உதயநிதி, அந்த இடத்திற்கு நிச்சயமாக, சத்தியமாக, ஒரு காலத்திற்கு வருவார். அப்படி வருகிற பொழுது, கருணாநிதி, ஸ்டாலின் பெரும் பேரும் புகழைவிட அதிகமாக பேரும், புகழும் பெறக்கூடியவர் என் தம்பி உதயநிதி.
நான் என்ன ஜோசியக்காரனா...இல்லை. இந்த வார்த்தையை ஒரு காலத்தில் கருணாநிதி என்னிடத்திலே சொன்னார். என்னையே மிஞ்சிடுவார் ஸ்டாலின் என்று சொன்னார். இது ஸ்டாலின், உதயநிதிக்கு தெரியும்... இதை நான் நீண்ட நெடுங்காலமாக சொல்லி வருகிறேன்.
காரணம்... இந்த இயக்கத்தை அழியாமல் காக்க வேண்டும். வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு எதிர்ப்பு கிடையாது. நமக்கு மட்டும்தான் எதிர்ப்பு. தமிழைச் சொன்னால் எதிர்ப்பு, தன்மானத்தை சொன்னால் எதிர்ப்பு, சுயமரியாதையை கேட்டால் எதிர்ப்பு, மாநில சுயாட்சியை கேட்டால் எதிர்ப்பு. ஆக எதை கேட்டாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி கையிலே ஆட்சியை வைத்துக் கொண்டு நடத்தி வருகிறோம்.
உதயநிதியை சொல்வேன், ராஜராஜனுக்கு பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜன் மன்னனாக இருக்கிற பொழுது, அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக் கொண்டான். தாய்லாந்து வரையிலே தனது ஆட்சியை நிறுவிக்காட்டியவன்.
இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... உதயநிதி ஒருநாள் அத்தகைய ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதை செய்தாலும் உதயநிதி சரியாக செய்கிறார்.
இனி இந்த இயக்கத்துக்கு அழிவில்லை. கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிற உதயநிதி, இனிமேல் கட்சியை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

