ADDED : செப் 25, 2025 02:42 AM

புதுடில்லி:தலைமைச் செயலர் தர்மேந்திரா இம்மாதத்துடன் பணி ஓய்வு பெறுவதால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என டில்லி தலைமைச் செயலகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
டில்லி அரசின் தலைமைச் செயலராக பதவி வகிக்கும், கடந்த 1989ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தர்மேந்திரா, இம்மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதேநேரத்தில், மத்திய அரசால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்து தலைமைச் செயலர் பதவிக்கான அந்தஸ்தில் உள்ள
அமித் யாதவ், தேபாஸ்ரீ முகர்ஜி, விஜய் குமார் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதில் அமித் யாதவ், தேபாஸ்ரீ முகர்ஜி மற்றும் விஜய் குமார் ஆகிய மூவரும் தற்போது, மத்திய அரசுப் பணியில் உள்ளனர். அஸ்வனி குமார் டில்லி மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கிறார்.
தர்மேந்திராவுக்கு மூன்று மாதங்கள் வரை பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பும் இருப்பதாக மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். இவருக்கு முன் தலைமைச் செயலராக இருந்த நரேஷ் குமார் 2023ம் ஆண்டு நவம்பர் 30ல் பணி ஓய்வு பெற்றார். ஆனால், அடுத்த ஆறு மாதங்களுக்கும், அதைத் தொடர்ந்து மேலும் மூன்று மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.