நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு
நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு
ADDED : அக் 11, 2024 07:05 AM
மைசூரு: தசரா விழாவை ஒட்டி நாளை நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான மைசூரு தசரா விழாவை, இம்மாதம் 3ம் தேதி துவங்கியது. கடந்த எட்டு நாட்களும் நகரின் பல்வேறு இடங்களில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்ததால், நகரமே களை கட்டியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் மைசூரில் குவிந்தனர்.
உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர், பாரம்பரிய முறைப்படி அரண்மனையில் தனியார் தர்பார் நடத்தினார்.
இன்று அரண்மனையில் ஆயுத பூஜை நடக்கிறது. பட்டத்து யானை, குதிரை, வாகனங்கள், ஆயுதங்களுக்கு யதுவீர் பூஜை செய்வார். தசரா விழாவின் 10வது நாளான நாளை விஜயதசமியை ஒட்டி, ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.
அபிமன்யு யானை மீது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி தேவியை அமர வைத்து, ஊர்வலத்தில் அழைத்து செல்லப்படும். அம்மனுக்கு மலர் துாவி, முதல்வர் சித்தராமையா ஊர்வலத்தை துவக்கி வைப்பார். அப்போது, ஏழு பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும்.
முன்னதாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் சிறப்பம்சங்கள், வெவ்வேறு துறைகளின் சாதனைகள் குறித்த அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தில் செல்லும்.
மாணவர்கள், போலீசார் இசை குழுக்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜம்பு சவாரி ஊர்வலத்தை ஒட்டி, மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.