குடியரசு தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு கொரோனா எச்சரிக்கையால் முக கவசம் கட்டாயம்
குடியரசு தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு கொரோனா எச்சரிக்கையால் முக கவசம் கட்டாயம்
ADDED : ஜன 25, 2024 04:37 AM

பெங்களூரு : குடியரசு தினத்தை முன்னிட்டு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். விழாவில் பங்குபெறுவோருக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் குடியரசு தின விழா, நாடு முழுதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில், பெங்களூரின் மானக் ஷா பரேட் மைதானத்தில் மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு மாநகராட்சியும், பெங்., நகர மாவட்டமும் செய்து வருகின்றன.
அணிவகுப்பு
போலீஸ், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, தீயணைப்பு, ஆயுதப்படை, அதிவிரைவுப்படை, பள்ளி மாணவர்கள் உட்பட 38 குழுக்களின் 1,150 பேர் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
இரண்டு தேச பக்தி பாடல்களுக்கு, 1,400 மாணவர்களின் நடனமாட உள்ளனர்.
ராணுவத்தின் எம்.இ.ஜி. பிரிவின் கலரி பட்டு தற்காப்பு கலை அரங்கேற்றப்படுகிறது. ஏ.எஸ்.சி. பிரிவின் மோட்டார் சைக்கிள் சாகச காட்சிகள் நடத்தப்படும். பயங்கரவாதிகளை பதுங்கி இருந்து தாக்குவது தொடர்பாக சிறப்புப் படை குழுவினர் சாகசம் செய்து காண்பிப்பர்.
இதற்கான ஒத்திகை மூன்று நாட்களாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒத்திகையை, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், பெங்., நகர மாவட்ட கலெக்டர் கே.தயானந்த், நகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.
7,000 இருக்கைகள்
பின், துஷார்கிரிநாத் கூறியதாவது:
குடியரசு தினத்தன்று கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், காலை 8:58 மணிக்கு மைதானத்துக்கு வருவார். அவருக்கு, ராணுவ முப்படைகளின் கர்நாடக உயர் அதிகாரிகள் அறிமுகம் செய்யப்படுவர்.
காலை 9:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார்.
திறந்தவெளி ஜீப்பில் சென்று அணிவகுப்பு படையினரின் மரியாதையை ஏற்பார். பின், குடியரசு தின சிறப்புரை ஆற்றுவார்.
அதன் பின், கலை நிகழ்ச்சிகள் நடக்கும். வெற்றி பெற்றோருக்கு கோப்பைகள் வழங்குவார். வி.வி.ஐ.பி.கள், வி.ஐ.பி.களுக்கு தலா 4,000 இருக்கைகள்; பொது மக்களுக்கு 3,000 இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.
100 கேமராக்கள்
பாதுகாப்பு கருதி, மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கையாக சிகிச்சை அளிக்க கூடிய வசதி கொண்ட ஆம்புலன்சில் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பர்.
நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் தேவையான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, விழாவுக்கு வருவோருக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா கூறியதாவது:
பாதுகாப்புக்காக, 9 டி.சி.பி.,க்கள், 16 ஏ.சி.பி.,க்கள், 46 இன்ஸ்பெக்டர்கள், 109 எஸ்.ஐ.,க்கள், 87 மகளிர் எஸ்.ஐ.,க்கள், 594 ஏ.எஸ்.ஐ.,க்கள், 184 சாதாரண உடை அதிகாரிகள், 56 கேமரா கண்காணிப்பு அதிகாரிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 10 கே.எஸ்.ஆர்.பி.,; நகர ஆயுத படைகள்; 2 தீயணைப்பு படைகள்; ஒரு குறி பார்த்து சுடும் படை, 1 அதிவிரைவு படை, 1 கழுகு பார்வை படை மைதானத்தின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள், காலை 8:30 மணிக்கு இருக்கைகளில் அமர வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் கண்டால் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
பர்ஸ், மொபைல் போன் தவிர மற்ற பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி, சிகரெட், கேமராக்கள், பட்டாசு, ஆயுதங்கள், உணவு பொருட்கள், மது பாட்டில்கள், தேசிய கொடி தவிர மற்ற கொடிகள் கொண்டு வர கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா விளக்கினார்.