ஐ.ஏ.எஸ்., அதிகாரி படத்துக்கு சிரிப்பு எமோஜி; பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு சிக்கல்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி படத்துக்கு சிரிப்பு எமோஜி; பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு சிக்கல்
ADDED : பிப் 14, 2025 09:35 PM

கவுகாத்தி: அசாமில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பேஸ்புக் பதிவு கமெண்டில் எமோஜியால் கருத்து பதிவிட்டவருக்கு ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
அசாமின் கோக்ராஜ்ஹர் பகுதி துணை கமிஷனராக இருப்பவர் வர்னாலி தேஹா. இவரது பேஸ்புக் பதிவு ஒன்றில், நரேஷ் பவுரா என்பவர், '' மேடம்,இன்று மேக் அப் இல்லையா'' என கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கு அமித் சக்கவர்த்தி என்பவர், சிரிக்கும் வகையில் எமோஜி ஒன்றை கருத்தாக பதிவிட்டார். இதனையடுத்து, நரேஷ் என்பவருக்கு வர்னாலி தேஹா, பேஸ்புக் பக்கத்திலேயே அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதில் இருவருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து நரேஷ்பவுரா, அமித் சக்கவர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீது வர்னாலி தேஹா, கோக்ராஜ்ஹர் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை இணைய வழியில் துன்புறுத்துவதாகவும், பாலியல் ரீதியில் விமர்சனம் செய்வதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பேஸ்புக் கருத்துக்கள் புகைப்படம் எடுத்து ஆதாரமாக அளிக்கப்பட்டது.இந்த வழக்கில், அமித் சக்கரவர்த்தி ஜாமின் வாங்கியிருந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக 273 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளதாக அமித் சக்கரவர்த்தி கூறியுள்ளார். வர்னாலி தேஹா ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பது தனக்கு தெரியாது. சிரிக்கும் வகையில் எமோஜி வெளியிட்டதற்காக ஜாமின் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.