ஐயப்ப பக்தர்களுக்கு வசதி: இடுக்கியில் ஏற்பாடுகள் தயார்
ஐயப்ப பக்தர்களுக்கு வசதி: இடுக்கியில் ஏற்பாடுகள் தயார்
ADDED : ஜன 11, 2025 10:48 PM
மூணாறு:சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் விக்னேஸ்வரி தலைமையில் நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
சபரிமலையில் ஜன. 14 ல் மகரஜோதி தரிசனம் நடப்பதால், இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து கலெக்டர் உயரதிகாரிகளுடன் ' ஆன்லைன்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் பக்தர்கள் கடந்து செல்லும் பகுதிகளில் 150 அதிகாரிகள் உட்பட 1350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வள்ளக்கடவு முதல் புல்மேடு மேல் பகுதி வரை 2 கி.மீ., துாரம் இடைவெளியில் ஆம்புலன்ஸ் உட்பட மருத்துவ குழு, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தீயணைப்புதுறையினர் 60 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டனர் என கலெக்டர் தெரிவித்தார். வனத்துறை பாதுகாப்பு, பக்தர்களுக்கு உணவு, பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாப்பு வேலி, தெருவிளக்குகள், தற்காலிக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
பஸ் வசதி
குமுளியில் இருந்து 50 கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுவதுடன் 10 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். சபரிமலையில் இருந்து புல்மேட்டிற்கு மகரஜோதி தரிசனம் காண வரும் பக்தர்கள் மீண்டும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கபடமாட்டார்கள். அசம்பாவிதங்களை தவிர்க்க புல்வெளிகளில் கற்பூரம் ஏற்றுவதையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் குமுளியில் இருந்து கம்பமெட்டு, கட்டப்பனை, குட்டிக்கானம் வழி செல்ல வேண்டும். இதுகுறித்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் நாளை ஆய்வு செய்கின்றனர்.