தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/படுதோல்வி!

படுதோல்வி!

படுதோல்வி!


UPDATED : அக் 28, 2026 09:24 PM

ADDED : அக் 28, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 09:24 PM ADDED : அக் 28, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: கர்நாடகா, உத்தர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா என நான்கு மாநிலங்களில் நடந்த சட்ட மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை தழுவியது. குறிப்பாக கர்நாடகாவில் நான்கு தொகுதிகளையும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கைப்பற்றி, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கர்நாடகா, உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் 28 இடங்களுக்கான சட்ட மேல்சபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டளிக்கும் இந்த தேர்தலில், நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிட்டன. இதில், உத்தர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பா.ஜ.,வும், கர்நாடகாவில் காங்கிரசும் ஆட்சியில் உள்ளன.

தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாகின. இதில், நான்கு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 28 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது.

குறிப்பாக கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில், காலியாக உள்ள 4 மேல்சபை தொகுதிகளில் அக்கட்சி முழு பலத்துடன் போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியை கூட காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.

மிக முக்கிய திருப்புமுனையாக, பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மேல்சபை உறுப்பினர் புட்டண்ணாவை, 908 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தே.ஜ., கூட்டணியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் ரங்கநாத் அபார வெற்றி பெற்றார்.

இதே போல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த தொகுதியான கலபுரகியை உள்ளடக்கிய கர்நாடகாவின் வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில், தற்போதைய மேல்சபை உறுப்பினரான பா.ஜ.,வின் ஷஷீல் நமோஷியே வெற்றி பெற்றார்.

கர்நாடகாவில் நடந்த இந்த சட்ட மேல்சபை தேர்தலில், முதல்வர் டி.கே.சிவகுமார் நேரடியாக களமிறங்கி, அனைத்து அமைச்சர்களையும் தேர்தல் பரப்புரையில் களமிறக்கி இருந்தார். எனினும் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், ஆளும் அரசுக்கு ஆதரவு திரட்ட முடியாமல் போனது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சட்ட மேல்சபை தேர்தல் முடிவுகளால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனினும், இந்த வெற்றி பா.ஜ., – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியை உற்சாகமடைய வைத்துள்ளது.

வரும் 2028 சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்பதற்கான முன்னோட்டமாக சட்ட மேல்சபை முடிவுகள் அமைந்து இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதே போல், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேசத்திலும் 11 சட்ட மேல்சபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் மீரட், பரேலி, லக்னோவில் வெற்றி பெற்று மூன்று தொகுதிகளையும் பா.ஜ., தக்கவைத்து கொண்டது. வாரணாசி மற்றும் ஆக்ரா ஆசிரியர் தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது.

பீஹாரில் எட்டு சட்ட மேல்சபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பாட்னா ஆசிரியர்கள் தொகுதியை முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கைப்பற்றி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தொகுதியை கடந்த 30 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த, பா.ஜ.,வின் தற்போதைய மேல்சபை உறுப்பினர் நவல் கிஷோர் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் டாக்டர் சஞ்சீவ் சிங் வீழ்த்தினார்.

எனினும் திர்ஹுத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நரேந்திர பிரசாத் சிங், சுயேச்சை வேட்பாளர் பூஷண் குமார் ஜாவை தோற்கடித்தார். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பட்டதாரிகள் தொகுதிகளுக்கான ஓட்டுக்கள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

மஹாராஷ்டிராவில் ஐந்து இடங்களுக்கு நடந்த சட்ட மேல்சபை தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. நான்கு மாநிலங்களில் 28 சட்ட மேல் சபை தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கவில்லை. எனினும், படித்த பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டளித்த இந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது, வரும் தேர்தல்களில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதால் தான் தோல்வியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் புலம்பி தீர்த்து வரும் சூழலில், சட்ட மேல்சபை தேர்தல் ஓட்டுச் சீட்டு முறையில் நடந்திருப்பதும், காங்கிரசின் பொய் பரப்புரைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக பா.ஜ., விமர்சித்துள்ளது.

இப்போ என்ன


சொல்ல போறீங்க?
உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார் மற்றும் கர்நாடகா என நான்கு பெரிய மாநிலங்களில் 28 சட்ட மேல்சபைக்கான தேர்தல், ஓட்டுச் சீட்டு முறையில் தான் நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்படவில்லை. இதில், காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது என கூற முடியுமா?
- பிரதமர் நரேந்திர மோடி



பட்டதாரி, ஆசிரியர்கள் தேர்தல் என்றால் என்ன?


மாநிலத்தின் மேல்சபை என்பதால், அங்கு சட்டம் இயற்றும்போது, பல்துறை நிபுணர்களின் பார்வையும், கருத்துகளும் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்த விசேஷ தேர்தல் முறையை வகுத்தனர். குறிப்பாக கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விசேஷ முறை கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்து, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் மேல்சபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றவர். இதில் ஒரு மாநில சட்ட மேல்சபையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பஞ்சாயத்து, நகராட்சி பிரதிநிதிகளாலும், மற்றொரு மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.,க்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதில் 12ல் ஒரு பங்கு மட்டுமே பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆறில், ஒரு பங்கு கவர்னரால் நியமிக்கப்படுவர்.
இந்தத் தேர்தலில் சாதாரண வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது. இதற்கெனத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும். பட்டதாரிகள் தொகுதிகளில் ஓட்டளிக்க பட்டம் பெற்று குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆசிரியர் தொகுதிகளில் ஓட்டளிக்க மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us