ஜப்பானியர்களை குறிவைத்து போலி கால்சென்டர்: 6 பேர் கைது
ஜப்பானியர்களை குறிவைத்து போலி கால்சென்டர்: 6 பேர் கைது
ADDED : மே 30, 2025 01:48 AM

புதுடில்லி: தொழில்நுட்ப உதவி மையம் என்ற பெயரில் போலியான, 'கால்சென்டர்' நடத்தி, ஜப்பானியர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கும்பலை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
கிழக்காசிய நாடான ஜப்பான் மக்களை ஏமாற்றி இணையத்தில் பணம் பறிக்கும் கும்பல் இந்தியாவில் இருந்து செயல்படுவதாக ஜப்பான் போலீஸ் சி.பி.ஐ.,க்கு தகவல் அளித்தது.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் டில்லியில் இரண்டு போலி கால்சென்டர்கள் முடக்கப்பட்டன.
மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டில்லி, உ.பி., ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ஜப்பானைச் சேர்ந்த நபர்களின் கம்ப்யூட்டர் திரைகளில், வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக எச்சரிக்கை தகவலை தோன்றச் செய்துள்ளனர்.
அதை பார்த்து பயந்து திரையில் தோன்றும் எண்ணுக்கு ஜப்பானியர்கள் அழைத்துள்ளனர்; அந்த அழைப்பு, இங்கு உள்ள போலி கால்சென்டருக்கு வந்துள்ளது.
அவர்களிடம் பேசி கணினியின் 'ரிமோட் அக்சஸ்' எனப்படும் எங்கிருந்தபடியும் கணினியை இயக்கும் அனுமதியை பெறும் இந்த கும்பல், அதன் வாயிலாக, அவர்களது நெட் பேங்கிங் விபரங்களை திருடி பணத்தை சுருட்டியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.