மிரட்டி ரூ.1.75 லட்சம் ரூபாய் பறித்த போலி மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
மிரட்டி ரூ.1.75 லட்சம் ரூபாய் பறித்த போலி மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
ADDED : மே 24, 2025 08:34 PM
புதுடில்லி:மாநகராட்சி அதிகாரி போல நடித்து, 1.75 லட்சம் ரூபாய் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு டில்லி டிபன்ஸ் காலனியில் ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வீட்டுக்கு, 9ம் தேதி ஒருவர் வந்தார். அந்த வீட்டில் இருந்த மூதாட்டியிடம், தன்னை மாநகராட்சி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீட்டின் கழிவுநீர் கால்வாய் மிகவும் இருப்பதாகவும், அதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றார். மேலும், மின் இணைப்பையும் துண்டிக்கப் போவதாக மிரட்டினார்.
அதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியிடம் இருந்து, 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு சென்றார். கடந்த, 13ம் தேதி மீண்டும் வந்த அந்த நபர், மின் இணைப்பை துண்டித்து, வீட்டில் நடக்கவுள்ள திருமண நிகழ்ச்சியை தடுத்து விடுவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டினார்.
மூதாட்டியின் கணவர் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பினார். ஆனாலும், அந்த நபர் அடிக்கடி வந்து பணம் கேட்டு மிரட்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து, டிபன்ஸ் காலனி போலீசில், மூதாட்டி புகார் செய்தார்.
மொபைல் அழைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஓக்லாவில் வசித்த ராஜா,42, என்பவரை கைது செய்தனர்.
மூதாட்டியை மிரட்டி பணம் பறித்ததை ராஜா ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து பைக், மொபைல் போன் மற்றும் 28,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஷாஹீன் பாகில் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருந்த ராஜா, பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த, 2018ம் ஆண்டு இந்திர பிரஸ்தா எஸ்டேட் போலீசார் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.