காற்று மாசு பற்றி விவாதிக்க கோரிய ராகுல்: சட்டென 'ஓகே' சொன்ன மத்திய அரசு
காற்று மாசு பற்றி விவாதிக்க கோரிய ராகுல்: சட்டென 'ஓகே' சொன்ன மத்திய அரசு
ADDED : டிச 13, 2025 01:01 AM

புதுடில்லி: “டில்லி உட்பட பல பெரிய நகரங்களில் காற்று மாசு முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அது பற்றி விவாதிக்க வேண்டும்,” என லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்திய நிலையில், மறுப்பு எதுவும் சொல்லாமல் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. லோக்சபாவின் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-.,யுமான ராகுல் நேற்று பேசியதாவது:
டில்லி உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது, கொள்கை ரீதியான பிரச்னை அல்ல. காற்று மாசு குறித்து ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், சபையில் விரிவான விவாதம் நடத்தி தீர்வு காண முற்பட வேண்டும்.
காற்று மாசை தவிர்க்க, ஒவ்வொரு நகரத்திற்கும் முறையான திட்டம் ஒன்றை உருவாக்கினால் தான், அடுத்த ஐந்து முதல், 10 ஆண்டுகளுக்கு மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.மாசு காரணமாக காற்று விஷமாகி வருவதால், லட்சக்கணக்கான குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. பலர் புற்று நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்.
முதியோர் மூச்சு விடுவதற்கே சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “காற்று மாசு பிரச்னை குறித்து விவாதிக்கவும், அதற்கு தீர்வு காணவும் மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உட்பட, அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். “சபையின் அலுவல் ஆய்வுக்குழு, இந்தப் பிரச்னை பற்றி எப்போது விவாதிக்கலாம் என தீர்மானித்து, நேரத்தை ஒதுக்கித் தரும்,” என்றார்.
எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு, ஓட்டு திருட்டு குற்றச்சாட்டுகள் வாயிலாக பார்லிமென்ட் நடவடிக்கைகளை ராகுல் தொடர்ந்து முடக்கி வந்ததால், சபையில் அவரது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், காற்று மாசு விவகாரம் முக்கியம் வாய்ந்தது என்பதால், முதன்முதலாக அவரின் கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

