விரும்பிய இடத்தில் தேர்வு மையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு யு.பி.எஸ்.சி., உறுதி
விரும்பிய இடத்தில் தேர்வு மையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு யு.பி.எஸ்.சி., உறுதி
ADDED : டிச 13, 2025 12:57 AM

புதுடில்லி: வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் வைத்து, அனைத்து வகையான தேர்வுகளிலும் அவர்கள் விரும்பும் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள், வெகு தொலைவிலோ அல்லது 'லிப்ட்' வசதி கூட இல்லாத கட்டடங்களிலோ ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யு.பி.எஸ்.சி., நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'யு.பி.எஸ்.சி., நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருதி, மத்திய அரசு வரையறுத்த குறைந்தபட்ச, 40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தங்கள் விண்ணப்பப்படிவத்தில், தாங்கள் விரும்பும் தேர்வு மையத்தை குறிப்பிடலாம். 'அதே தேர்வு மையமே அவர்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதிசெய்வோம்' என, குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து யு.பி.எஸ்.சி., தலைவர் அஜய் குமார் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளின் தேர்வு மைய தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் டில்லி, கட்டாக், பாட்னா, லக்னோ போன்ற நகரங்களின் தேர்வு மையங்கள் வேகமாக நிரப்பப்படுகின்றன. “இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேர்வு மையங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதை அறிந்தோம்.
“இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்கள் விரும்பும் தேர்வு மையத்தை அவர்களுக்கு ஒதுக்கியபின் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

