அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது
ADDED : ஜன 03, 2024 07:48 AM

பெங்களூரு: அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த, போலி லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர், கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில், வருவாய் துறை அலுவலக அதிகாரி ராமதாஸ், 50. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரிடம் மர்மநபர் ஒருவர், மொபைல் போனில் பேசினார். லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறினார்.
'உங்கள் மீது லோக் ஆயுக்தாவிற்கு, நிறைய புகார் வருகிறது. விசாரணை நடத்தாமல் இருக்க, பணம் தர வேண்டும்' என்று கூறினார். இதுகுறித்து விதான் சவுதா போலீசில், ராமதாஸ் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீநாத்ரெட்டி, 34 என்பவரை நேற்று முன்தினம், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி, கர்நாடகா, ஆந்திராவில் 50 அரசு அதிகாரிகளை மிரட்டி, பணம் பறித்தது தெரியவந்தது.
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் காட்சிகளை பார்த்து, அதேபோன்று அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.
இதுதவிர பெங்களூரு பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி, அத்திப்பள்ளி, ஹெப்பகோடி, ஜிகனி, சூர்யாநகர், கோலார் டவுன் போலீஸ் நிலையங்களில், இவர் மீது திருட்டு வழக்கு பதிவாகி இருப்பதும் தெரிந்தது.
'ஸ்ரீநாத்ரெட்டியின் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்த, அரசு அதிகாரிகள் அவர் மீது புகார் அளிக்க வேண்டும்' என்று, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியுள்ளார்.