கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை போலி சாமியார் சிறையில் அடைப்பு
கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை போலி சாமியார் சிறையில் அடைப்பு
ADDED : அக் 04, 2025 02:27 AM

புதுடில்லி:மாணவியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்த சாரதி சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுடில்லி வசந்த் கஞ்ச்சில் இயங்கும் 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவன மேலாளராக சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி, 62, பதவி வகித்தார்.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு படிக்கும், 17 மாணவியரை பார்த்தசாரதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட ஒரு மாணவி மற்றும் விமானப்படை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சிருங்கேரி சாரதா பீடத்தின் அதிகாரிகள் மாணவியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், பார்த்தசாரதி மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
இதுகுறித்து, வசந்த கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், பார்த்தசாரதி தலைமறைவானார். மேலும், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பதுங்கியிருந்த பார்த்தச்சாரதி, செப்., 28ம் தேதி கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் ஐந்து நாட்கள் விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனிமேஷ் குமார் முன், பார்த்தசாரதி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
கைது செய்யப்பட்டதற்கான குறிப்பு மற்றும் வழக்கு நாட்குறிப்புகளை வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், சிறையில் துறவி அங்கி அணிதல், மருந்துகள் மற்றும் சன்யாசிக்கான உணவு வழங்குதல் போன்ற பார்த்தசாரதியின் கோரிக்கை குறித்து பதில் அளிக்குமாறு போலீசுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பார்த்த சாரதி, சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, பார்த்தசாரயின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புத்தொகைகளில் இருந்த 8 கோடி ரூபாயை போலீஸ் முடக்கியது.
பார்த்தசாரதியிடம் இருந்து ஐ.நா., நிரந்தர துாதர் மற்றும் 'பிரிக்ஸ்' கூட்ட மைப்புக்கான இந்தியாவின் சிறப்பு துாதர் என்ற போலி விசிட்டிங் கார்டுகள் போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.