ADDED : ஜன 09, 2025 06:29 AM
பீன்யா: குடும்பப் பிரச்னை காரணமாக, மனைவி, மகள் உட்பட மூவரை கொலை செய்து கணவன், போலீசில் சரணடைந்தார்.
நெலமங்களாவைச் சேர்ந்தவர் கங்கராஜு, 42. ஹெப்பகுடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்யம்மா, 38, மகள் நவ்யா, 19, இன்னும் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரும், பீன்யாவில் வசித்து வந்தனர்.
நேற்று பள்ளிக்கு சென்றிருந்த இரு குழந்தைகள், மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்குள் தாய், அக்கா, பெரியம்மாவின் மகள் ஹேமாவதி, 22, ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதை பார்த்து கூச்சலிட்டனர்.
அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, மூவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக '112' போலீஸ் உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அவர்களை கொலை செய்ததாக கங்கராஜு, பீன்யா போலீசில் சரணடைந்தார்.
அங்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக, மூவரையும் கங்கராஜு அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.