பெங்களூரு திரும்பிய சிவராஜ்குமார் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகம்
பெங்களூரு திரும்பிய சிவராஜ்குமார் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகம்
ADDED : ஜன 26, 2025 11:09 PM

பெங்களூரு: அமெரிக்காவில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் சிவராஜ்குமார், குணமடைந்து நேற்று பெங்களூருக்கு திரும்பினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் அமோக வரவேற்பு அளித்தனர்.
நடிகர் சிவராஜ்குமார், சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டார். கடந்த, 2024 டிசம்பர் 18ம் தேதி, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பின், குணமடைந்த அவர் பெங்களூருக்கு திரும்பினார்.
அமெரிக்காவில் இருந்து, துபாய் சென்று, அங்கிருந்து பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, நேற்று காலை தன் மனைவி கீதாவுடன் வந்திறங்கினார். அவரை வரவேற்க ரசிகர்களும், திரையுலகினரும் குவிந்திருந்தனர். இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ரசிகர்கள் ஆப்பிள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, நாகவரா சாலையின், மான்யதா டெக்பார்க்கில் உள்ள தன் வீட்டுக்கு புறப்பட்டார். அவரது வீட்டருகிலும், ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அங்கு சிவராஜ்குமார் அளித்த பேட்டி:
அனைத்து நண்பர்கள், உறவினர்கள் எனக்கு தைரியம் கூறினர். நான் அமெரிக்காவுக்கு செல்லும் போது, உணர்ச்சி வசப்பட்டேன். என் குடும்பத்தினரும் ஆறுதலாக இருந்தனர். அமெரிக்கா சென்ற பின், எனக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.
வீட்டை பற்றிய சிந்தனையில் இருந்தேன். இரண்டு, மூன்று நாட்கள் திரவ உணவு உட்கொண்டேன். நிதானமாக நடக்க துவங்கினேன். வாழ்க்கையே ஒரு பாடம்தான். அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். நான் தைரியத்துடன் எதிர்கொண்டேன். இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி, டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்பின் படப்பிடிப்பில் பங்கேற்பேன். தற்போது என் 131வது படம் தயாராகிறது. ராம்சரணுடன் ஒரு படம் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

