ADDED : டிச 13, 2024 04:50 AM

ஹைதராபாத் : குற்றம் சாட்டப்பட்ட விவசாயியை கைவிலங்குடன் சிகிச்சைக்கு அழைத்து சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோடங்கல் சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் ரேவந்த் ரெட்டி. இந்த தொகுதிக்கு உட்பட்ட லகசார்லா கிராமத்தில், அரசு திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாக பொதுமக்களிடம் கடந்த நவ.,11ல் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் அரசு அதிகாரிகள் சிலரை விவசாயிகள் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக ஹிரா நாயக் என்ற விவசாயி உள்ளிட்ட 25 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இதையடுத்து சங்காரெட்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயி நாயக்குக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் கைவிலங்குடன் மருத்துவமனைககு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இது, 'மனிதாபிமான மற்ற செயல்' என்று எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவர் ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கை விலங்குடன், விவசாயியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மேலும் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்களை ஏற்க முடியாது. கைவிலங்குடன் விவசாயிக்கு சிகிச்சை அளித்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக சங்கா ரெட்டி போலீஸ் எஸ்.பி., விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.