ADDED : மே 21, 2025 02:44 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே, காட்டு யானை தாக்கியதில், விவசாயி பலியானார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எடத்துநாட்டுகரை வட்டமண்ணைப்புரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி உம்மர், 65. இவருக்கு அங்கு வன எல்லையில் உள்ள, உப்புகுளம் பகுதியில் விவசாய தோப்பு உள்ளன. இதில் ரப்பர், மிளகு சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை உம்மர் தோப்பிற்கு சென்றார். மாலை நேரமாகியும் அவர், வீடு திரும்பிவில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள், தோப்பிற்கு சென்று பார்த்த போது உம்மர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த, வனச்சரக அதிகாரி சுபைர் தலைமையிலான வனத்துறையினரும், நாட்டுகல் போலீசாரும் உம்மரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வனத்துறையினர் கூறுகையில், தோப்புக்கு செல்லும் வழித்தடத்தில், காட்டு யானையிடம் உம்மர் சிக்கியுள்ளார். தப்பியோட முயன்ற போது, யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்,' என்றனர்.