பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்கள் கைதால் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு
பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்கள் கைதால் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு
ADDED : மார் 19, 2025 10:16 PM

மொகாலி: பஞ்சாபில் எல்லை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இணைய சேவையை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கி உள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபின் ஷம்பு மற்றும் கனவுரி பகுதியில் விவசாயிகள் கடந்த ஆண்டு பிப்.,13 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தலேவல் கடந்த 54 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக, மொகாலியில் மத்திய குழுவினருடன் தலேவல் மற்றும் சர்வர் சிங் பந்தர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், அவர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் ஷம்பு நோக்கி புறப்பட தயார் ஆனார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை தாண்டி அவர்கள் முன்னேறி செல்ல முயன்றனர். இதில் இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கனவுரி பகுதியில் இருந்து ஷம்பு நோக்கி கிளம்ப முயன்ற 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களையும் போலீசார் அகற்றினர்.
இதனையடுத்து கனவுரி மற்றும் அதனை சுற்றி உள்ள சங்ரூர் மற்றும் பாட்டியாலா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.