விவசாயிகள் போராட்டம்; பஞ்சாபில் பிப்ரவரி 24 வரை இணைய சேவைகள் நிறுத்தம்
விவசாயிகள் போராட்டம்; பஞ்சாபில் பிப்ரவரி 24 வரை இணைய சேவைகள் நிறுத்தம்
ADDED : பிப் 18, 2024 05:51 PM

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, பஞ்சாபில் பாட்டியாலா, சங்குரூர் மற்றும் பதேகர் சாஹிப் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் பிப்.,24ம் தேதி வரை இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளதால், ஹரியானா உடனான பஞ்சாபின் எல்லைகளான ஷம்பு மற்றும் காநவுரி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா, சங்குரூர் மற்றும் பதேகர் சாஹிப் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இணைய சேவைகள் இடைநிறுத்தம் பிப்ரவரி 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.