ADDED : அக் 27, 2024 11:12 PM
பெலகாவி: குடிக்க பணம் கொடுக்காத தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
பெலகாவி, அதானியின், மதபாவி கிராமத்தில் வசித்தவர் துக்காராம் வனகன்டே, 89. இவரது மகன் பாளாசாப் மல்லு 49.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாளாசாப் மல்லு, சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வார்.
குடிக்க பணம் கேட்டு, தந்தையை நச்சரிப்பார். நேற்று முன்தினம் இரவும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மேலும் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்டார்.
அவர் பணம் இல்லை என்றதால் கோபமடைந்த பாளாசாப் மல்லு, தந்தையை மனம் போனபடி தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த துக்காராம் வனகன்டே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.
வழக்கு பதிவு செய்த அதானி போலீசார், பாளாசாப் மல்லுவை கைது செய்தனர்.