மகளுக்கு வீட்டு சாப்பாடு தர முடியாததால் பராமரிக்கும் உரிமையை இழந்த தந்தை
மகளுக்கு வீட்டு சாப்பாடு தர முடியாததால் பராமரிக்கும் உரிமையை இழந்த தந்தை
UPDATED : மே 03, 2025 01:37 AM
ADDED : மே 02, 2025 11:59 PM

புதுடில்லி: கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர், விவாகரத்துக்குப்பின், மாதந்தோறும் 15 நாட்கள், தன் 8 வயது மகளை உடன் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தும் கூட, ஒருநாள் கூட அவரால் மகளுக்கு வீட்டு சாப்பாடு கொடுக்க முடியவில்லை.
இதனால், மகளை கவனித்துக்கொள்ள அவருக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அனுமதி
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மனைவியை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றிருந்தார். அவருக்கு 3 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர். சிங்கப்பூரில் வர்த்தகம் நடத்தும் அவர், கேரளாவில் நடந்த விவாகரத்து வழக்கின்போது, தன் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு அனுமதி பெற்றிருந்தார்.
மாதந்தோறும் 15 நாட்களுக்கு இரு குழந்தைகளும் தந்தையுடன் வசிப்பதற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்காக, கேரளாவில் வாடகைக்கு வீடு எடுத்து, சிங்கப்பூரில் இருந்து 15 நாட்கள் வந்து அவர் தங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், அவருடன் இருக்கும் 15 நாட்களும் குழந்தைகளை சரியாகக் கவனிப்பதில்லை என்றும், அவரிடம் குழந்தைகளை அனுப்பும் உத்தரவை ரத்து செய்யும்படியும், அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, இரு குழந்தைகளிடமும் நீதிபதிகள் தனியாக பேசினர்.
இதையடுத்து, விவாகரத்தான தம்பதிக்கு மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.
தீர்ப்பு விபரம்
மிகவும் பாசமான தந்தையாக இருந்தபோதிலும், 15 நாட்களில் ஒரு முறைகூட, வீட்டில் சமைத்த சாப்பாட்டை அவரால் கொடுக்க முடியவில்லை.
வளர் இளம்பருவத்தில் இருக்கும் 8 வயது சிறுமிக்கு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுப்பது அவசியம்.
அதற்கான சூழல், அவரது தந்தையோடு இருக்கும் 15 நாட்களிலும் சிறுமிக்கு கிடைப்பதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும், தந்தையை தவிர, வேறு யாருமே அவருடன் பேசுவதற்கு கூட இல்லை என்பது கொடுமையான விஷயம். இந்த வழக்கில், 3 வயது சிறுவனையும், தந்தையுடன் 15 நாட்கள் இருப்பதற்கு அனுமதித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, முற்றிலும் நியாயமற்றது.
அதே நேரத்தில், குழந்தைகளின் தாய் வீட்டில், அவர்களின் தாய்வழிப் பாட்டி, தாத்தா வசிக்கின்றனர். குழந்தைகளின் தாயும் வீட்டில் இருந்தபடியே பணி புரிகிறார்.
அங்கு அந்த சிறுமிக்கு சத்தான வீட்டு சாப்பாடு கிடைக்கும் வாய்ப்பும், பெரியவர்களின் பராமரிப்பும் கிடைக்கும்.
எனவே, மாதந்தோறும் 15 நாட்களுக்கு தந்தையுடன் குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதற்கு பதில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வார இறுதி நாட்களில், தந்தையுடன் குழந்தைகள் தங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

