பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் ஆப்கனில் 400 பேர் பலி! மருத்துவமனை சேதமடைந்து 250 பேர் காயம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் ஆப்கனில் 400 பேர் பலி! மருத்துவமனை சேதமடைந்து 250 பேர் காயம்
ADDED : மார் 18, 2026 01:31 AM

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 400 பேர் கொல்லப்பட்டனர்; 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது . ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கி வரும், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களில் ஈடுபட்டது.
ஆப்கனை நிர்வகிக்கும் தலிபான் மற்றும் பாகிஸ்தான் இடையே, கடந்த மூன்று வாரங்களாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில், மருத்துவமனையின் பெரும் பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டது. மேலும், 2,000 படுக்கை வசதி கொண்ட இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், இந்தத் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி, 400 பேர் உயிரிழந்தனர்; 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தலிபான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ''பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து இந்த மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தின. ''இது, மனிதாபிமான விதிகளுக்கு எதிரான குற்றம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்று குறிப்பிட்டார்.
ஆனால் பாகிஸ்தான் அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 'காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் ராணுவ இலக்குகளை மட்டுமே துல்லியமாக தாக்கியுள்ளோம். மருத்துவமனை தாக்கப்பட்டது என்ற தகவல் தவறானது' என்று அந்நாட்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் மோதல்கள் குறித்து பாக்., தரப்பில் வெளியிட்ட அறிக்கை
* தாக்குதல்களில், இதுவரை 684 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்; 912 பேர் காயமடைந்துள்ளனர்
* மேலும், தலிபான்களின் 229 டாங்குகள், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன
* ஆப்கானிஸ்தான் முழுதும் 73 பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு இடங்கள், வான்வழி தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தரப்பில் வெளியிட்ட அறிக்கை
* பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளில், 87 பெண்கள், 22 குழந்தைகள் உட்பட 835 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
* மேலும், 540 வீடுகள் சேதமடைந்து, 8,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

