ADDED : மார் 14, 2024 10:22 PM

பெங்களூரு, - 'லோக்சபா தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தோல்வி பயம் உள்ளது,'' என பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
தோல்வி பயத்தால், கர்நாடக காங்கிரசுக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை. அமைச்சர்களும் கூட தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை. எனவே வேறு கட்சியில் இருந்து, தலைவர்களை காங்கிரசுக்கு இழுக்க முயற்சிக்கின்றனர்.
காங்கிரஸ் சீர்குலைந்த நிலையில் உள்ளது. புதிய முகங்கள், அனுபவம் மிக்கவர்களுக்கு, பா.ஜ., முன்னுரிமை அளிக்கிறது. எங்கள் கட்சியில் மட்டுமே இத்தகைய முடிவுகள் எடுக்க முடியும்.
அமைச்சர்களுக்கும் தோல்வி பயம் வாட்டுகிறது. பா.ஜ.,வில் 'சீட்' கிடைக்காதவர்கள், தங்களின் தொடர்பில் உள்ளதாகக் கூறுவதே, துணை முதல்வர் சிவகுமாரின் பழக்கம். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. எடியூரப்பா எப்போதும் என்னை ஆசிர்வதிப்பார்.
அவரை சந்தித்து, ஆசி பெற்றேன். என்னை ஆதரித்து பிரசாரம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இம்முறை புதுமையான முறையில், வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். டாக்டர் மஞ்சுநாத் மருத்துவ துறையில், பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்தார். நற்பணிகளுக்கு எப்போதும், கவுரவம் அளிக்கப்படும் என்பதை கட்சி உணர்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

