இறந்த விமானியின் உறவினருக்கு 'சம்மன்'; விசாரணை குழுவுக்கு கூட்டமைப்பு 'நோட்டீஸ்'
இறந்த விமானியின் உறவினருக்கு 'சம்மன்'; விசாரணை குழுவுக்கு கூட்டமைப்பு 'நோட்டீஸ்'
ADDED : ஜன 16, 2026 08:11 AM

புதுடில்லி: குஜராத், 'ஏர் இந்தியா' விமான விபத்து தொடர்பாக அந்த விமானத்தை இயக்கிய பைலட் கேப்டன் சுமீத் சபர்வாலின் உறவினரும் விமானியுமான கேப்டன் வருண் ஆனந்திற்கு சம்மன் அனுப்பிய ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவுக்கு, இந்திய விமானிகள் கூட்டமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் ஏ.ஐ., 171 என்ற விமானம், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விமானம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தை இயக்கிய விமானி கேப்டன் சுமீத் சபர்வாலின் உறவினரும் விமானியுமான கேப்டன் வருண் ஆனந்திற்கு சமீபத்தில் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நடவடிக்கைக்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அந்த விசாரணை அமைப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸ்: குஜராத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கும், தற்போது சம்மன் அனுப்பப்பட்ட விமானி வருண் ஆனந்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்ட விமான இயக்க திட்டமிடல் குழுவிலோ அல்லது சம்பவ இடத்தில் அவர் இருக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் ஒரு சாட்சியாகவோ அல்லது தொழில்நுட்ப நிபுணர் சாட்சியாகவோ அவர் இருக்க முடியாது. விபத்துக்குள்ளான விமானத்தின் தலைமை விமானியான கேப்டன் சுமித் சபர்வாலின் உறவினர் என்பதால் கேப்டன் ஆனந்த் அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே, விசாரணை நிறைவடையும்முன் அக்குழு, ஒரு முன்கூட்டிய முடிவை எடுத்துள்ளனர். இறந்த விமான குழுவின் மீது பழியை சுமத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிப்படி, விமான விபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக குடும்ப உறுப்பினர்களை அழைப்பது சட்டவிரோதமானது. எனினும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கேப்டன் விஜய் ஆனந்த் ஆஜராக தயாராக உள்ளார். ஆனால், அவருக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை. எனவே, கேப்டன் விஜய் ஆனந்திற்கு சம்மன் அனுப்பியது ஏன் என்பது குறித்து விமான விபத்து புலனாய்வு பிரிவு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

