புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
ADDED : ஏப் 25, 2025 04:56 AM

பெங்களூரு : யு டியூபில் விளம்பரம் பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஏமாற்றப்பட்டார்.
கர்நாடக அரசில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவான, 'சகலா மிஷன்' இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பல்லவி அக்ருதி, 42, கடந்த மாதம் 10ம் தேதி, யு டியூபில் புடவை விற்பனை குறித்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.
அந்த வீடியோவில், மதுரையில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்டு இருந்தது. வீடியோவில், பல புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
அதில், தங்களுக்கு விருப்பமான புடவையின் புகைப்படத்தை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டு இருந்தது. இதன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தி உள்ளார்.
தன் வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்து பல நாட்கள் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எந்த பதிலும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை, பல்லவி உணர்ந்தார். கடந்த 17ம் தேதி பெங்களூரு கிழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், 'பூர்ணிமா கலெக் ஷன்ஸ் என்ற யு டியூப் சேனலில் வந்த வீடியோவை பார்த்து, 850 ரூபாய் செலுத்தி, புடவையை ஆர்டர் செய்தேன். ஆனால், புடவை வரவில்லை. நான் இழந்த தொகை சிறிதுதான்.
ஆனால், என்னை போன்று பலரும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம். இதனால், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைத்திருக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.