ADDED : பிப் 01, 2024 12:48 AM
புதுடில்லி, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகக் கோரி ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.
டில்லி அரசு கடந்த 2021 -- -22 நிதியாண்டில் கொண்டு வந்த மதுபான கொள்கையால் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரிக்க, கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது; அடுத்தடுத்து நான்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன.
கெஜ்ரிவால் அந்த சம்மன்களை சட்டவிரோதம் என கூறி தவிர்த்தார்.
இந்நிலையில், மீண்டும் நாளை ஆஜராகக் கோரி ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதில் ஆஜராகவில்லை எனில், கைது வாரன்ட் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளனர்.