ADDED : ஜன 07, 2025 06:36 AM

பெங்களூரு: ''நடப்பாண்டு மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரின் கிருஷ்ணா அலுவலகத்தில், சர்வதேச திரைப்பட விழா குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
பின் முதல்வர் அளித்த பேட்டி:
பெங்களூரில் மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை திரைப்பட விழா நடக்கவுள்ளது. 2006ல் துவங்கப்பட்ட பெங்களூரு திரைப்பட விழா, தற்போது 16 ஆண்டை எட்டியுள்ளது. இந்த திரைப்பட விழா சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இம்முறை 9 கோடி ரூபாய் செலவில், திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு திரைப்பட விழாவில், 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்தும், 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும். 13 திரையரங்குகளில் 400 காட்சிகள் ஒளிபரப்பாகும்.
இம்முறை திரைப்பட விழாவுக்கு, யாரை துாதராக நியமிக்க வேண்டும் என்பதை, கமிட்டி முடிவு செய்யும்.
திரைப்பட விழாவுக்கு 12 கோடி ரூபாய் கேட்டனர். நாங்கள் 9 கோடி ரூபாய் வழங்க சம்மதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

