சல்மான் கானுக்கு மிரட்டல் சினிமா பாடலாசிரியர் கைது
சல்மான் கானுக்கு மிரட்டல் சினிமா பாடலாசிரியர் கைது
ADDED : நவ 14, 2024 12:44 AM

ராய்ச்சூர்: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சினிமா பாடலாசிரியரை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான். இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 7ம் தேதி, மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு, 'வாட்ஸாப்' எண்ணிற்கு, ஒரு தகவல் வந்தது.
அதில், 'நடிகர் சல்மான் கான், எனக்கு 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லையென்றால், அவரை கொலை செய்வோம்' என குறிப்பிட்டிருந்தது.
மிரட்டல் வந்த எண்ணை வைத்து, மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.
அது, கர்நாடக மாநிலம், ராய்ச்சூரை சேர்ந்த வெங்கட் நாராயணா என்பவரின் மொபைல் போன் என்பதை கண்டுபிடித்தனர்.
அவரோ, தனக்கு வாட்ஸாப் பயன்படுத்த தெரியாது என்றார். மேலும், அறிமுகம் இல்லாத ஒருவர், பேச வேண்டும் என்று தன் மொபைல் போனை சில நிமிடங்கள் வாங்கியதாக தெரிவித்தார்.
வெங்கட்டின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, வாட்ஸாப் பதிவிறக்கம் செய்ய, ஓ.டி.பி., வந்திருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் மான்வியைச் சேர்ந்த சுகைல் பாஷா, 24, என்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அவரை கைது செய்த போலீசார், மும்பைக்கு அழைத்து சென்றனர். சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்திற்கு, சுகைல் பாஷா பாடல்கள் எழுதி உள்ளார். பாடல்கள் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில், மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.