ADDED : மார் 09, 2024 11:12 PM

பெங்களூரு: ''பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் மஞ்சுநாத் அல்லது வேறு யாரை களம் இறக்கினாலும் பயப்பட மாட்டோம்,'' என, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஏழு லோக்சபா தொகுதிக்கு, காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்களை அறிவித்தது. இதில், பெங்களூரு ரூரல் தொகுதியில், துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் போட்டியிடுகிறார்.
அதே வேளையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக ஜெயதேவா மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மஞ்சுநாத்தை களமிறக்கலாம் என ஆலோசித்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
கட்சி தலைமை உத்தரவிட்டால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளராக யார் போட்டியிட்டாலும், பயப்படமாட்டோம். மஞ்சுநாத் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. அவரின் தொழிலுக்கு எங்கள் அரசு உறுதுணையாக இருக்கும்.
சித்தராமையா முதல்வராக இருந்தபோது, மஞ்சுநாத் தனது பணியில் தொடர்ந்தார். இப்போதும் மீண்டும், எங்கள் அரசு வந்த பின்னும், தொடர்ந்தது. அவருக்கு அனைத்து மரியாதையும் கொடுத்தோம். ஆனால் அரசியலுக்கு வரும்போது பார்க்கலாம்.
'மாசு அடைந்த அரசியலில் மஞ்சுநாத் வரக்கூடாது' என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருந்தார். அப்படியானால் அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி மாசுபட்டவர்களா. தொழில் ரீதியாக நல்ல பெயர் பெற்ற டாக்டர் மஞ்சுநாத், அரசியல் ரீதியாக தனது பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது எங்களுக்கு முக்கியமான தேர்தல். ஜனநாயகம் உயிர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இருண்ட நாட்கள். எங்களின் வாக்குறுதிகளை கிண்டல் செய்த பிரதமர் மோடி, இப்போது அதே வாக்குறுதியை 'காப்பி' அடிக்கிறார். வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாரா, வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்த கருப்பு பணத்தை மீட்டாரா, நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தாரா. எதிர்க்கட்சியினரை வளர விடாமல் தடுக்க, என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

