ADDED : ஏப் 01, 2025 09:21 PM
புதுடில்லி,:மத்திய டில்லி ஜான்டேவாலன் விரிவாக்கப் பகுதியில் உள்ள, வணிக வளாகத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த வளாகத்தில், தனியார் வங்கி, அலுவலகங்கள் மற்றும் பீட்சா கடை அமைந்துள்ளன.
தீயை அணைக்கும் பணி இரவு வரை நீடித்தது. கட்டத்தில் இருந்து தீ எரிந்த நிலையில் விழுந்த விளம்பர பலகைகள் விழுந்து, அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் தீயில் எரிந்து கருகின. அந்தப் பகுதி முழுதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. கட்டடத்தில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அருகிலுள்ள டில்லி மேம்பாட்டு ஆணைய வணிக வளாகத்துக்கும் தீ பரவியது.
கருகிய ரிக்ஷா
வடகிழக்கு டில்லி சாஸ்திரி பூங்கா வாகன நிறுத்துமிடத்தில் நேற்று மதியம் 2:30 மணிக்கு தீப்பற்றியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் மற்றும் 10 மின் ரிக்ஷாக்கள் தீயில் எரிந்து கருகின. அருகில் உள்ள பழைய பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ, வாகன நிறுத்துமிடத்துக்கும் பரவியது. எட்டு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நொய்டா
இங்கு, 18வது செக்டாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வளாகத்துக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். பலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் பதே நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வளாகத்துக்குள் சிக்கித் தவித்தவர்களை ஹைட்ராலிக் ஏணி வாயிலாக மீட்டனர்.

