ADDED : மே 02, 2025 01:05 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள டிக்கி பஜார் பகுதியில், ஐந்து மாடி ஹோட்டல் உள்ளது. இதில், நான்காவது மாடியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து ஐந்தாவது மாடிக்கு வேகமாக பரவியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குறுகிய பாதையால், ஹோட்டலை நெருங்க முடியாமல் தவித்தனர்.
இதனால், ஹோட்டலில் இருந்தவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளானதுடன் தீக்காயம் அடைந்தனர்.
தீ பரவியதை தொடர்ந்து மாடி ஜன்னல் வழியே சிலர் குதித்து உயிர் தப்பினர். ஒரு பெண், மடியில் வைத்திருந்த குழந்தையை கீழே வீசிவிட்டு தானும் குதிக்க முயன்றார்.
அவரை அங்கிருந்த வர்கள் தடுத்தனர். இதையடுத்து ஹோட்டலை நெருங்கிய தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை கட்டுப்படுத்தினர்.
மூச்சுத்திணறல் மற்றும் தீயில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

