ADDED : ஜன 03, 2025 12:17 AM

பெங்களூரு: கர்நாடகாவில், யமஹா ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பைக்குகள் எரிந்து நாசமாகின.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, மஹாதேவபுரா பி.நாராயணபுராவில், 'யமஹா' பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் விற்பனைக்காக 40 பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால், மாலை 6:30 மணிக்கே ஷோரூம் ஊழியர்கள், தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில், நள்ளிரவில் ஷோரூமில் திடீரென தீ பற்றியது. தகவல் கிடைத்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயன்றனர். பக்கத்து ஷோரூமுக்கும் தீ பரவும் நிலை ஏற்பட்டது. உடனடியாக அந்த ஷோரூமில் இருந்த 15 பைக்குகள் வெளியே கொண்டு வரப்பட்டன.
நீண்ட போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. ஷோரூமுக்குள் சென்று பார்த்த போது, விற்பனைக்கு நிறுத்தப்பட்டு இருந்த 40 பைக்குகள், சர்வீஸ் செய்ய வந்த 20 பைக்குகள் மற்றும் உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் 1 கோடி ரூபாய் வரை இழப்பீடுஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மின் கசிவால் தீ விபத்து நடந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது.

