மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2025 03:35 PM

புதுடில்லி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு, மத்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை கடலில் மீன் பிடிக்கச்சென்ற 13 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காயமுற்ற மீனவர்கள் 3 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது பற்றிய தகவல் வெளியானவுடன், இந்தியாவுக்கான இலங்கை துாதர் (பொறுப்பு), வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டார். அவரிடம், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் எதிர்ப்பை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் இருக்கும் இந்திய துாதரகமும் இது தொடர்பாக, அந்நாட்டு அரசுடன் பேச உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் தான் அணுக வேண்டும் என்று நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.