நாட்டில் முதல்முறை: விமானத்தில் வைபை சேவை வழங்குகிறது ஏர் இந்தியா!
நாட்டில் முதல்முறை: விமானத்தில் வைபை சேவை வழங்குகிறது ஏர் இந்தியா!
UPDATED : ஜன 01, 2025 10:16 PM
ADDED : ஜன 01, 2025 07:34 PM

புதுடில்லி: உள்நாட்டு விமான பயணத்தின் போது விமானங்களில் வைபை வசதி வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் விமான பயணத்தில் வைபை சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவிற்கு கிடைத்து உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் குறிப்பிட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களிலும் இந்த சேவை வழங்கப்படும். இவை நியூயார்க், லண்டன் , பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் நகரங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள் ஆகும். இதற்கு முன்னர், விஸ்தாரா நிறுவனம் சர்வதேச விமானங்களில் வைபை சேவை வழங்கியது. ஆனால், நவ., மாதம் இந்த விமான நிறுவனம், ஏர் இந்தியா உடன் இணைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு வைபை வசதி இலவசமாக வழங்கப்படும். படிப்படியாக மற்ற விமானங்களுக்கும் பயன்படுத்தப்படும்.விமானம் 10 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல செல்லும் போது, பல சாதனங்களில் வைபை சேவையை பயன்படுத்தலாம். விமான பயணத்திலும் சமூக ஊடகங்கள், பணி நிமித்தம், நண்பர்களுக்கு செய்தி அனுப்ப இணைய வசதியை பயன்படுத்த வைபை வசதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா கூறியுள்ளது.

