புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு
புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு
UPDATED : செப் 03, 2024 08:45 PM
ADDED : செப் 03, 2024 03:27 PM

புதுடில்லி : அரசு முறைப்பயணமாக புருனே சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா - புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று (செப்.,03) காலை புருனே புறப்பட்டு சென்றார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
புருனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே தலைநகர் பண்டார் செரி பெகவான் பகுதியில் அவர் தங்கவுள்ள ஹோட்டலில் இந்திய வம்சாவளியினர் நம் தேசியக்கொடியுடன் நின்று, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.
மசூதியை பார்வையிட்ட பிரதமர்
புருனே சென்ற பிரதமர் மோடி அங்குள்ள உமர் அலி சைபுதீன் மசூதியையும் பார்வையிட்டார்.