ஐந்து குட்டிகளை பிரசவித்தது இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிபுலி
ஐந்து குட்டிகளை பிரசவித்தது இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிபுலி
ADDED : நவ 20, 2025 10:15 PM

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிறந்த நம் நாட்டின் முதல் சிவிங்கிபுலியான முக்கி, ஐந்து குட்டிகளை ஈன்றது.
நம் நாட்டில் அழிந்துவிட்டதாக, கடந்த 1952ல் அறிவிக்கப்பட்ட சிவிங்கிபுலிகளை மீண்டும் வளர்க்க மத்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, 2022ல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து, 20 சிவிங்கிபுலிகள், நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அவை பராமரிக்கப்பட்டன. அவற்றில் சில சிவிங்கிபுலிகள், இந்தியாவின் தட்பவெப்ப நிலையை சமாளிக்க முடியாமல் இறந்தன.ஒரு சில சிவிங்கிபுலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றன. அவ்வாறு, இந்தியாவில் முதலில் பிறந்த முக்கி என பெயர் சூட்டப்பட்ட சிவிங்கிபுலி, வரும் பிப்ரவரியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இந்நிலையில், முக்கி சிவிங்கிபுலி, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி, முதன்முதலாக குட்டிகளை ஈன்றுள்ளது வனத்துறையினர் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கி, ஐந்து குட்டிகளை ஈன்ற தகவலை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உறுதி செய்துள்ளார். அவர் தன் சமூக வலைதளத்தில், 'மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், நம் நாட்டில் பிறந்த சிவிங்கிபுலி, ஐந்து குட்டிகளை பெற்றெடுத்தது. தாய் மற்றும் சிவிங்கிபுலி குட்டிகள் நலமாக உள்ளன. இதன் வாயிலாக, சிவிங்கிபுலி வளர்ப்பில் வரலாற்றில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.'சிவிங்கிபுலி அறிமுக முயற்சியில், இது புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றம், சிவிங்கிபுலி பராமரிப்பில் புதிய பாதையை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என, தெரிவித்துள்ளார்.
புதிய குட்டிகளின் வருகையைத் தொடர்ந்து, நம் நாட்டில் உள்ள சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை, 32 ஆக அதிகரித்துள்ளது.

