பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
ADDED : அக் 13, 2025 02:49 AM

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் வரலாற்றில் முதன்முறையாக, விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்பு படை யில், 1969ம் ஆண்டு முதல் விமானப்பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில், பி.எஸ்.எப்.,பின் விமானப்பிரிவில் முதல் பெண் விமான இன்ஜினியராக பாவ்னா சவுத்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பி.எஸ்.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எம்.ஐ., 17 ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு ஆட்கள் தேவைப்பட்ட நிலையில், ஏற்கனவே மூன்று துணை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு, 'எம்.ஐ., 17, சீட்டா, துருவ்' போன்ற ஹெலிகாப்டர்களுடன் வி.ஐ.பி.,க்களுக்கு பயன்படுத்தும் ஜெட் விமானங்களை இயக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், இதற்காக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.