ADDED : ஏப் 08, 2025 06:31 PM
புதுடில்லி:ஜஹாங்கிர்புரியில், திருநங்கையரைப் போல வேடமிட்டு தங்கியிருந்த வங்கதேசத்தை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக டில்லியில் தங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சோதனை நடத்த துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
டில்லி மாநகரப் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பலரை நாடு கடத்தியுள்ளனர்.
இந்நிலியில், ஜஹாங்கிர்புரி தர்யா கஞ்சில் தங்கியிருந்த முஹமது ஷகிதுல்,24, முஹமது துலால் அக்தர் என்ற ஹசேரா பீவி,36, முஹமது அமிருல் இஸ்லாம் என்ற மோனிகா,31, முஹமது மாஹிர் என்ற மஹி,22, மற்றும் சதாம் உசேன் என்ற ரூபினா,30, ஆகிய ஐந்து பேரை, ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆணாக பிறந்த இந்த ஐந்து பேரும், திருநங்கையாக மாறுவதற்காக சிறு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். மேலும், உடல் தோற்றத்தை மாற்ற ஹார்மோன் ஊசியும் போட்டுள்ளனர். திருநங்கையரைப் போல உடையணிந்து, சிக்னல்களில் பிச்சை எடுத்து வந்தனர்.
அவர்களிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மொபைல் போன்கள் நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள ஐ.எம்.ஓ., செயலியுடன் இணைக்கப்பட்டு இருந்தன. அந்த போனில்தான் வங்கதேசத்தில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசி வந்துள்ளனர். ஏஜென்ட்கள் உதவியுடன் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
ஐந்து பேரையும் நாடு கடத்த, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோல, திருநங்கையர் போல மாறுவேடமிட்டிருந்த ஆறு வங்கதேசத்தினர் மார்ச் 27ம் தேதி கைது செய்யப்பட்டனர்.