ADDED : ஜன 17, 2025 12:24 AM

பாலக்காடு; பாலக்காடு, மலம்புழா பூங்காவில் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது.
கேரள மாநில நீர்ப்பாசனத் துறையும், மாவட்ட சுற்றுலாத்துறையும் இணைந்து, பாலக்காடு அருகேயுள்ள, மலம்புழா பூங்காவில் நடத்தும் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மலம்புழா தொகுதி எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.
மலம்புழா ஊராட்சித்தலைவர் ராதிகா தலைமை வகித்தார். ஒரு வாரம் நடைபெறும் இக்கண்காட்சி, வரும் 22ம் தேதி நிறைவு பெறும். ஒரு லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருந்து உயர்தர மலர்களும் இடம் பெற்றுள்ளன.
ஆர்க்கிட், செண்டுமல்லி, சூரியகாந்தி, டெலிசியா, காஸ்மோஸ், டேலியா, பூகேன்வில்லியா, சால்வியா, பிரெஞ்ச் மேரிகோல்டு, பெட்டூனியா, வின்கா, ஜின்னியா, கிரிஸான்தமம், கோப்ரினா, மேரிகோல்டு, ஆஸ்டர் உள்ளிட்ட 30 வகையான மலர்கள் கண்காட்சயில் வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வண்ணத்தில் உள்ள ரோஜா பூக்கள் பூங்காவை அழகூட்டியுள்ளன. போட்டோ பாயின்ட், செல்பி கார்னர், வாட்டர் பவுண்டன், மியூசிக் பவுண்டன் ஆகியவையும் கண்காட்சியில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.
உணவுக் கண்காட்சி, ஸ்டால்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் செடி விற்பனை மையம் ஆகியவையும் இங்கு உள்ளன.