தரமற்ற இனிப்பு விற்ற கடைகளுக்கு உணவு துறை அதிகாரிகள் நோட்டீஸ்
தரமற்ற இனிப்பு விற்ற கடைகளுக்கு உணவு துறை அதிகாரிகள் நோட்டீஸ்
ADDED : மார் 19, 2025 09:16 PM
பெங்களூரு; இனிப்பு தின்பண்டங்கள் விற்கும் கடைகளில், உணவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தரமற்ற தின்பண்டங்கள் விற்ற, வர்த்தக லைசென்ஸ் பெறாத பல கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
உணவு பொருட்களில், உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரசாயன நிறங்கள் பயன்படுத்துவது, வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பின் உணவுத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப், பிஷ் கபாப், கோபி மஞ்சூரியன், கேக்குகள், இனிப்பு தின்பண்டங்களுக்கு செயற்கை நிறங்கள் பயன்படுத்த, கர்நாடக அரசு தடை செய்தது.
பிளாஸ்டிக் காகிதத்தில் வேக வைக்கப்படும் இட்லியால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது. எனவே இட்லி வேகவைக்கவும், போளி தயாரிக்கவும் பிளாஸ்டிக் காகிதம் பயன்படுத்த கூடாது என, உணவுத்துறை உத்தரவிட்டது. அதிகாரிகள் அவ்வப்போது உணவகங்கள், ஹோட்டல்களில் சோதனை நடத்துகின்றனர்.
அரசின் உத்தரவுக்கு பின்னரும், இனிப்பு பண்டங்கள் தயாரிப்போர், அபாயமான ரசாயன நிறங்கள் பயன்படுத்துவதாக, பொது மக்களிடம் இருந்து புகார் வந்தது. ரம்ஜான், யுகாதி பண்டிகைகள் வருவதால், இனிப்பு பண்டங்கள் விற்கும் கடைகளை, அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
பெங்களூரின் பல இடங்களில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மல்லேஸ்வரத்தின், 'ஹோளிகே மனே', 'அம்மாஸ் பேஸ்ட்ரீஸ்' உட்பட பிரபலமான கடைகளில் சோதனை நடந்தது. இனிப்பு பண்டங்கள் தயாரிக்க பிளாஸ்டிக் பயன்படுத்திய, வர்த்தக லைசென்ஸ் பெறாத கடைகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மல்லேஸ்வரத்தின் சில கடைகளில், இனிப்பு பண்டங்கள் தயாரிப்போர் துாய்மையை கடைபிடிக்கவில்லை.
அம்மாஸ் பேஸ்ட்ரீஸ் இனிப்பு பண்டங்கள் தயாரிக்க லைசென்ஸ் பெறவில்லை என்பதால், அந்த கடைக்கும் நோட்டீஸ் அளித்தனர்.
சமையல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலும், உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பன்னீர், ரெடிமேட் பரோட்டா பாக்கெட்டுகள், சமையல் எண்ணெய், மசாலா பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். காலாவதியான பொருட்களை விற்க கூடாது என, ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.